Saturday, November 27, 2010

மந்திரப்புன்னகை


நியாயமாக இந்த படத்திற்குதான் 'குவாட்டர் கட்டிங்' என்று பெயர் வைத்திருக்க வேண்டும். குடிக்கிறார்கள்... குடிக்கிறார்கள்... குடிக்கிறார்கள்... பார்க்கிற நமக்கே போதையேறுகிற அளவுக்கு குடிக்கிறார்கள்! இது போதாதென்று கரு.பழனியப்பனின் வசனங்கள் ஒவ்வொன்றும் தனி போதையாகி தள்ளாட வைக்கிறது! (மடக்கி போட்டா கவிதை, மாரு வலிக்க பேசினா வசனம்ங்கிறதை தகர்த்து தரை மட்டமாக்கியிருக்கிறார் பழனியப்பன். ஒவ்வொரு வரியும் மகா பரமஹம்சர்கள் கூட சொல்லாத தத்துவங்கள்) ஒரு உளவியல் படத்தை ராவாக சொல்லாமல், நைய அரைத்த மாவாக சொல்லியிருப்பதுதான் இந்த படத்தின் விசேஷம்!
தனி பிளாட், தனிமை வாழ்க்கை, 'தண்ணி'யாக கரைகிற நிமிடங்கள் என்று தனது தாடியை விடவும் கருப்பான வாழ்க்கை வாழ்கிறார் ஹீரோ பழனியப்பன். அவ்வப்போது பெண்கள் என்பது அடிஷனல் பழக்கம்! "நீ நல்லவன் கிடையாது. உனக்கு நல்ல பொண்ணு கிடைக்க மாட்டா. உன்னை மாதிரி ஆளுக்கு எல்லாம் நல்ல பொண்ணு கிடைச்சுட்டா நல்லவனுக்கு எல்லாம் பொண்ணு எங்கே கிடைக்கும்?" இப்படி அவர் அப்பாவே கேட்கிற அளவுக்கு ரொம்ப நல்லவர்தான்(?) கரு.பழனியப்பன். "என்னை ஆண்டவன் தப்பா படைச்சுட்டான். மேனுபேக்சரிங் டிஃபெக்ட், மாத்த முடியாது" என்று அவரே ஒப்புதல் தருகிறார் ஒரு காட்சியில்.


அப்படிப்பட்ட இவரையும் ஒருத்தி காதலிக்கிறாள். காதல் கைகூடுகிற நேரத்தில் அவளையும், வேறொருவனையும் ஒரே படுக்கையறையில் ஒன்றாக பார்க்கிற பழனியப்பன் அவளை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் சரணடைகிறார். அப்புறம் என்னாச்சு என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், நமது எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிட்டு ஜம்மென்று விரிகிறது வேறொரு டிராக்!
தனக்கு என்ன வருமோ, அதை தேர்வு செய்திருப்பதற்காக கருவுக்கு ஒரு பலே போடலாம்! அந்த குடி பாடலில் மட்டும் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார். இவர் பேசும் பல வசனங்களுக்கு சென்சாரில் சைலண்ட் போட்டிருக்கிறார்கள். (ஆனாலும் "தேவ்டியா வீட்டுல இருக்கேன்" என்பது போன்ற வசனங்களை என்ன செய்து சிதைச்சாலும் புரிஞ்சுப்போம்ல...) தமிழ்சினிமா கால காலமாக பூஜித்து வந்த அம்மா சென்ட்டிமென்ட் இந்த படத்தில் சர்வ நாசம்! "நாம பிறக்கலைன்னா அம்மாவுக்கு பேரு மலடி. தெரியும்ல" என்கிற போது கரு.பழனியப்பனின் கழுத்தை நெறித்தால் கூட என்ன என்றுதான் தோன்றுகிறது. ஒரு கார்த்திகை திருநாளில் பிளாட் எங்கும் அகல் விளக்கு எரிய, ஒரு சிகரெட்டை உதட்டில் பொறுத்திக் கொண்டு நெருப்பு தேடும் அவர், அடுத்து என்ன செய்வாரோ என்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறார். நல்லவேளை...
சந்தானம் இப்போதெல்லாம் படத்தையே தாங்கி பிடிக்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டார். இந்த படத்தில் இன்னும் ஒரு ஸ்டெப் ஜாஸ்தி. மனைவியை குளிர்விக்க நினைக்கும் அவர், கிஃப்டுடன் வீட்டுக்கு போக, அதுவே அவருக்கு வினையாகி தொலைப்பதெல்லாம் பயங்கரம். "கண்ணை மூடேன். நான் ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன். காட்றேன்". இது சந்தானம். "கண்ணை தெறந்தாலும் நான்தானே பார்க்க போறேன். பரவாயில்ல. காட்டுங்க" இது பெண்டாட்டி. (யப்பா, ஒரு முடிவு பண்ணியே பேனாவை திறந்திருப்பாங்க போலிருக்கு!) ஆனால் செத்த கிளி ஜோக்கெல்லாம் ரொம்ப 'கிலி' சார்!
ஒரு நவநாகரீக பெண்ணின் யதார்த்தத்தோடு மீனாட்சி. பீர் பாட்டிலை பல்லால் திறக்கும் ஸ்டைலையும், உன்னை எங்கெல்லாம் பார்த்தான் தெரியுமா என்று அங்கலாய்க்கும் தோழியிடம், பார்த்துட்டு போகட்டுமே, அதனால் கற்பு ஒண்ணும் கெட்டு போயிடாது என்று ஜோவியலாக எடுத்துக் கொள்வதையும் பார்த்தால் நெஞ்சில் பஞ்சடைக்கிறது. க்ளைமாக்சில் "அன்பை தாங்க முடியலையே உன்னால்" என்று கரு.பழனியப்பனிடம் கலங்குவது நெகிழ்ச்சி! மீனாட்சிக்கு இன்னும் கொஞ்சம் சதை பிடிப்பு இருந்திருந்தால் நமக்கும் அவர் மேல் ஒரு 'பிடிப்பு' இருந்திருக்குமோ?


குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் நகுலன் பொன்னுசாமி. அவ்வப்போது பிள்ளையை பார்க்க பிளாட்டுக்கே வருவதும், சிற்சில அட்வைஸ்களை அள்ளி விடுவதுமாக அசர வைக்கிறார். கிராமத்தில் நடக்கும் அந்த பிளாஷ்பேக்கிலும் என்ன ஒரு தெளிவு அவரிடம்! வீட்டை பூட்டிய எதிர்வீட்டுக்காரை எவ்வளவு தன்னம்பிக்கையோடு கேள்வி கேட்கிறார்! ஆனால்... அத்தனையும் பொய்யாகிற போது அவர் எடுக்கிற முடிவு திடுக் திருப்பம்.
பிளாட் செகரட்டரியாக வரும் தம்பி ராமைய்யாவும், அவரிடம் "என் பொண்டாட்டி எங்கே-" என்று சீனுக்கு சீன் கேட்கும் அந்த குடிகாரரும் கூட மனதில் நிற்கிறார்கள். பழனியப்பன் கட்டிலுக்கு அவ்வப்போது வந்து போகும் மகேஸ்வரி, கிராமத்து அம்மா ரம்யா. இந்த பெண்களின் ஷேடோவில் புதுப்புது அர்த்தங்களை சொல்லியிருக்கிறார் கரு.
ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு எல்லா காட்சிகளையும் நிஜம்போல உணர வைக்கிறது. வித்யாசாகரின் பாடல்களில் சட்ட சடசட... அன்பில்லாம கரைஞ்சது போதும்... இந்த வருடத்தின் மஹா மெலடிகள்!
அட... கரு.பழனியப்பனின் டில்யூஷனில் கூட ஸ்ரீகாந்த் வருகிறாரப்பா. (பழைய பாசம்!)
விஷ§வல் ட்ரிட் தெரியும். அதனுடன் டயலாக் ட்ரீட்டும் இணைந்தால் அதுதான் மந்திரப்புன்னகை!
மொத்ததில் மந்திரப்புன்னகை - தந்திரம்

தனா

2 comments:

Philosophy Prabhakaran said...

கேபிள் அண்ணே... வேறு பெயரில் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா...

Cable சங்கர் said...

illai.. இது என் நண்பர்..

Post a Comment