Wednesday, December 1, 2010

உள்ளதைச் சொல்லுகிறேன்...




பசிக்காத  வரம் தருகிறேன் கொஞ்சம் பழைய சாதம் இருந்தா போடு! என்று கேட்டானாம் ஒரு சன்னியாசிப் பரதேசி.

“நேர நிர்வாகம் என்கிற தலைப்பில் சுய முன்னேற்றப் புத்தகங்கள்!!! தன்னம்பிக்கை தர்ம கர்மாதிபதி லேனா தமிழ்வாணன்,இப்பொழுது திருச்சி,தஞ்சை,மதுரை,நெல்லை என்று ஒவ்வொரு ஊராகப்போய் ‘நேர நிர்வாகம்பற்றி லெக்சர் கொடுக்கிறார்.அதாவது அவருடைய சுய நேரம் பயனுள்ள வகையில் கழிகிறது.அந்த பேச்சிக்கு அவர் டிமாண்ட் செய்த தொகை,கட்டணமாகக் கைக்கு வந்து சேர்கிறது.வந்து விடுகிறது என்ன! முன்பே வந்து விட்டது! அதாவது ரூபாயை வரவு வைத்து கொண்டு தான் தேதி கொடுத்திருப்பார்.

சரி, பேசியவனூக்கு பேரமும்,காசும் கிடைத்தது. கேட்டவன் கதை?? தேருக்கூத்து பார்த்த கதை தான்! வெட்டி வேலை!இந்த நேர நிர்வாகப் பேச்சை கேட்ட நேரத்தில்,வீட்டில் எருமை மாட்டுக்கு “உண்ணிஎடுக்கும் வேலையில் ஈடுப்படிருந்தாலும் உருப்படியாக தான் இருந்திருக்கும் என்பது பிறகுதானே புரிய வருகிறது.

தன்னம்பிக்கைத் தொடர், தன்னம்பிக்கை புத்தகம் எல்லாம் சூடாக விற்பனையாகின்றன.இவை சூசகமாகச் சொல்வது என்ன? நம் ஒட்டுமொத்த சமூகமும் தன்னம்பிக்கை அற்றுத் திரிகிறது.

மந்திரத்தால் மாங்காய் விழுமா? விழுமானல், புத்தகத்தால் தன்னம்பிக்கை பிறந்துவிடும்.உளவியலார்கள் என்ன சொல்லுகிறார்கள்? ஒரு மனிதன் பிறந்து வளர்ந்த சூழ்நிலை,குடும்ப வறுமை அல்லது செழுமைப் பின்னணி,பெற்றோரின் குணம் அல்லது வளர்ப்பு முறை-இதுவே ஒரு மனிதனின் மனோபாவத்திற்க்குக் காரணம் என்கிறார்கள்.

வேதாந்திகள் சொல்வது வேறு,ஒரு மனிதன் பிறந்த ஜாதகத்தில் தைரிய ஸ்தானத்தில் உச்ச கிரகம்,நீச கிரகம் இருப்பது,போவது,வந்து வந்து போகிற கிரக சஞ்சாரம் அப்புறம் லக்னாதிபதி,ராசியாதிபதி எங்கெ எந்த வீட்டில் இருக்கிறான்,எந்த வீட்டைப் பார்க்கிறான் இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டே ஒருவனது குணநலன்கள் அமைகிறது என்கிறார்கள்.

ஒரு வேளை இதுதான் சரியோ என்று கூட நினைக்கத் தோன்றும்.காரணம்,ஒரு குடும்பத்தில் நான்கு அண்னன் தம்பிகள் இருப்பர்.ஒருவன் முட்டாள்,ஒருவன் புத்திசாலி,மற்றொவன் முரடன்,கடைசியானவன் கோழை என்றாலும் மூளைத்திறனும்,குணநலன்களும் ஒருவருக்கொருவர் மாறுபடுகின்றனர்.ஒரே குடும்பம்,ஒரே குடும்பச் சூழ்நிலை அப்படியிருந்தும் இந்த குணநல வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன? புரியவில்லை.

தாழ்வு மனப்பான்மையைப் போக்குவது எப்படி? தன்னம்பிக்கைக் குறைவுக்கு இந்த தாழ்வுமனப்பான்மைதானே காரணம் என்று கூறுகிறார்கள்,எழுதுகிறார்கள்.

ஆனால் தாழ்வுமனப்பான்மை என்பது மூன்றுமாத குழந்தையாக இருக்கும் போதே மனிதனுக்கு ஏற்பட்டு விடுகிறதாம்.உளவியலார்கள் கருத்து இது. எப்படி? மூன்று மாத குழந்தை தூங்குகிறது.அதன் உடலின் மீது தாயார் ஒரு துணியைப் போர்த்தியிருகிறாள். குழந்தை விழித்துக் கொள்கிறது.அதற்குத் தன் மேல் போர்த்தப்பட்டுள்ள துணி ஒரு இடையூறாக இருக்கிறது.அதனால் தன் காலால் உதைத்து உதறித் துணியை விலக்குகிறது.ஆனால் துணியோ அதன் கால்களில் சிக்கிக் கொள்கிறது.காலில் சிக்கியத் துணியை மேலும் உதறி உதறிப் பார்க்கிறது.துணி மேலும் கால்களில் சிக்கிக் கொள்கிறதே தவிர,தன் முயற்சியில் வெற்றிப்பெற முடியாமல் போன குழந்தை தாழ்வு மனப்பான்மையுற்று அழ்த்தொடங்குகிறது.ஆக மூன்றாம் மாதத்தில் தாழ்வுமனப்பான்மை தோன்றுகிறது.

சரி,தன்னம்பிக்கை கொண்டு சராசரி மனிதன் எப்படி வாழ வேண்டும்,வாழ்வில் உயர வேண்டும் என்று வாழ வழி சொல்லும் நபர்கள் யார் என்று பார்த்தால்... அந்தோ பரிதாபம்! அதை நாளை பார்ப்போம்.  

தனா

No comments:

Post a Comment